India

திருப்பம்! ராகுலுடன் சச்சின் பைலட் திடீர் சந்திப்பு; சமரசத்துக்கு வாய்ப்பு

புதுடில்லி: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்து வரும் மோதலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், நேற்று காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன் இணைந்து, தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கட்சியின் மேலிட தலைவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வி அடைந்தது.

காங்கிரஸ், எம்.எல்.ஏ.,,க்கள் கூட்டத்தில் பங்கேற்காததால், சச்சின் பைலட்டிடமிருந்து, துணை முதல்வர் பதவியும், மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.இதனால், கெலாட் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக, பா.ஜ., வினர் கூறி வருகின்றனர். இதையடுத்து, வரும், 14ல், ராஜஸ்தான் சட்டசபை கூட்டம் துவங்கவுள்ளது. இதில், கெலாட், தன் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பலத்த பாதுகாப்புடன், சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பைலட் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் ரகசிய இடத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள சச்சின் பைலட், நேற்று, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரியும், காங்., பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரை, டில்லியில் சந்தித்து பேசினார்.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சச்சின் பைலட், ஏற்கனவே ஒருமுறை பிரியங்காவை, ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, சற்று பொறுமையாக இருக்கும் படி, சச்சின் பைலட்டிடம், பிரியங்கா வலியுறுத்தினார். ஆனால், 'கெலாட்டை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால், அடுத்த கட்ட பேச்சை துவக்கலாம்' என, பைலட் உறுதியாக இருந்தார். இதனால், சமரச முயற்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட்டிடம், தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர். இதன் எதிரொலியாகவே, நேற்று, ராகுல் - சச்சின் பைலட் சந்திப்பு நடந்தது. இந்த பேச்சின் போது, 'கெலாட்டை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால், சமரசத்துக்கு தயார்' என, பைலட் மீண்டும் கூறினார். பிரியங்காவும், ராகுலும், பைலட்டை சமாதானப்படுத்தும் வகையில், பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.

ராகுலும், பைலட்டும் நீண்ட கால நண்பர்கள் என்பதுடன், இருவரது குடும்பத்தினரும், நீண்ட காலமாக நட்புடன் இருப்பதால், பைலட்டை, ராகுலும், பிரியங்காவும் எளிதில் சமாதானப் படுத்தி விட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சச்சின் பைலட்டின் இந்த திடீர் நடவடிக்கை, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்தும் என்றும், அவருக்கு, கட்சியில் முக்கிய பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ராஜஸ்தானில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு, எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைந்தது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

கதவு திறந்திருக்கிறது!


ராஜஸ்தானில், காங்கிரஸ் தலைமையில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. இது தொடர்பான வதந்திகளை காங்கிரஸ் கட்சியினர் நம்ப வேண்டாம். சச்சின் பைலட், மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவருக்கான கதவு, எப்போதும் திறந்தே இருக்கும். கோவிந்த் சிங், ராஜஸ்தான் மாநில காங்., தலைவர்பஞ்சாப் காங்.,கிலும்கோஷ்டி பூசல் உச்சம்

குழு அமைப்பு!


ராகுல் - சச்சின் பைலட் சந்திப்பு குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கூறியதாவது: இரு தலைவர்களும், ராஜஸ்தான் அரசியல் குறித்து, மனம் திறந்து பேசினர். கட்சியின் நலனுக்கும், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் நலனுக்கும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதில், சச்சின் பைலட் உறுதியாக உள்ளார். பிரச்னைகளுக்கு தீர்வு காண, மூன்று பேர் குழுவை, காங்கிரஸ் தலைவர் சோனியா நியமித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், சச்சின் பைலட் கோஷ்டியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வர் கெலாட்டை, நேற்று மாலை சந்தித்து பேசினர்.

பஞ்சாபிலும் கோஷ்டி பூசல்:


மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, பஞ்சாபிலும் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து உள்ளது. கள்ளச்சாராய விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது. சமீபத்தில், விஷ சாராயம் குடித்த, 121 பேர், இங்கு பலியாயினர்.'மாநில அரசின் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டது. அதிகாரிகள், முக்கிய பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதன் காரணமாகவே, போதைப் பொருள் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது' என, அகாலி தளம், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,க்களான, பிரதாப் சிங் பாஜ்வா, சம்செர் சிங் துல்லோ ஆகியோரும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக, பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளனர். 'விஷ சாராய பலி குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த வேண்டும்' என, இருவரும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பஞ்சாப் கவர்னரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால், எரிச்சல் அடைந்துள்ள, முதல்வர் அமரீந்தர் சிங், இருவரையும் கட்சியிலிருந்து நீக்க, கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளதால், பஞ்சாப் காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Football news:

संचार के लिए 109 लाखों पर एंडी कोल: यह पागल पैसा है । मैनचेस्टर यूनाइटेड यादृच्छिक पर उन्हें खर्च नहीं होगा
जुवेंटस लुका पेलेग्रिनी जेनोआ को उधार दिया
पैलेस, ब्राइटन और शेफील्ड ब्रूस्टर खरीदना चाहते हैं. लिवरपूल 25 लाख पाउंड के लिए पूछना
मिलान स्ट्राइकर बोडो-चमक गेज के लिए 4 लाख यूरो की पेशकश की है । वह रन बनाने में उन्हें यूरोपा लीग
एटलेटिको वर्दी के तीन सेट में सुआरेज़ की एक तस्वीर से पता चला
लेमर लाइपजि + ग के लिए दिलचस्प है
चेल्सी मिडफील्डर लोफस गाल क्लब बदल सकते हैं वेस्ट हैम, साउथेम्प्टन और एस्टन विला